உலகெங்குமுள்ள பக்தர்களால் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி !

உலகெங்குமுள்ள பக்தர்களால் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி !

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த நன்னாள் ஸ்ரீகிருஷ்ண ஜன் மாஷ்டமி விழா, ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா இன்று உலகெங்குமுள்ள பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.

‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே’ இந்த அற்புத வார்த்தைகள் பகவான் கிருஷ்ணரால் பகவத் கீதையில் சொல்லப்பட்டவை.

அதாவது எப்பொழுது எங்கு தர்மம் தலை சாய்ந்து அதர்மம் தலை
யோங்குகிறதோ அப்பொழுது அங்கு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் யுகம் தோறும் அவதரிக்கிறேன் என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்.

குருசேத்திர போர் ஆரம்பிக்குமுன்னர் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு போதித்தவைதான் பகவத்கீதையாக நம் கரங்களில் தவழ்கின்றன.

தர்மத்துக்குப் புறம்பாக பல அநியாயங்கள் செய்துவந்த கம்சனை அழிக்கும்படி பிரம்மாவிடம் முறையிட்டார் பூமாதேவி.

திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நிறுத்துவார் என அவருக்கு வாக்குறுதி அளிக்கிறார்.

வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக கண்ணனை பிறக்க வைத்துதன் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார்.

வசுதேவருக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று வானத்திலிருந்து ஒரு அசரீரி கூற அதனால் அச்சமுற்ற கம்சன் தேவகியை கொல்ல முயன்றபோது அதனை தடுக்கிறார் வசுதேவர்.

தனக்குப் பிறக்கும் பிள்ளைகளை அவனிடமேஒப்படைத்து விடுவதாக
வாக்களிகிறார்.

அதனையடுத்து அவர்களை சிறையில் அடைத்து கண்காணித்து வந்தான் கம்சன்.

தேவகிக்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் சிறிதும் இரக்கமின்றி கொன்று விடுகிறான் கம்சன்.

ஏழாவதாக கருவுற்றதும் திருமால் மாயை என்ற பெண்ணைப் படைத்து தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் சேர்த்துவிடுகிறார்.

‘நீ நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாக இருக்க வேண்டும்’ என்கிறார்.

அதன்படியே மாயை செய்ய தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்து விட்டதாக பேச்சு எழுந்தது.

கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை ரோகிணியின் வயிற்றில் பிறந்தது அவரே பலராமன்.

தேவகி எட்டாவதாக கருவுற திருமால் அவள் வயிற்றில் கருவானார்.

ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று கிருஷ்ணா பிறந்தார்.

தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம் சேர்த்துவிட்டு அவளுக்கு பிறந்த பெண்குழந்தையை கொண்டுவந்து கம்சனிடம் ஒப்படைக்குமாறு பகவானே அவர்களுக்கு அருள் வாக்களித்தார்.

அதன்படி வசுதேவர் குழந்தைக் கிருஷ்ணரை தூக்கிக்கொண்டு செல்கையில் கடும் மழையிலி ருந்து அவர்களைப் பாதுகாக்க ஆதிசேஷன் துணையாகச் செல்கிறார்.

கோகுலத்தில் யசோதையின் அருகில் குழந்தை கிருஷ்ணரை கிடத்திவிட்டு அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்தார் வசுதேவர்.

மயக்க நிலையில் இருந்த யசோதைக்கு இது தெரியாது.

அந்த பெண் குழந்தையை கொல்வதற்கு கம்சன் வந்தான்.

ஆனால் அது அவன் கைகளில் இருந்து விடுபட்டு வானில் எழுந்து எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி ‘துர்க்கையான என்னை உன்னால்
கொல்ல முடியாது. உன்னைக் கொல்லக் கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்’ என்று கூறி மறைந்தது.

பின்னர் கிருஷ்ணர் வளர்ந்து கம்சனை வதம் செய்கிறார்.

கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த நாளில் அவருக்கு பிடித்த உணவுப் பொருட்களை செய்தும் கிருஷ்ணரை நன்றாக அலங்கரித்தும் அவரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் முகமாக குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கிருஷ்ணர் கோவில்களில் பூஜை, பஜனை, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில், விரதம் அனுஷ்டிக்கின்றனர். பொதுவாக பழங்களையே சாப்பிடுவார்கள்.

பலர் இரவு 12 மணிக்கு மேல் கிருஷ்ணரை வழிபட்ட பிறகே விரதத்தை கைவிடுகின்றனர்.

மறுநாள் சூரிய உதயத்திற்குப் பிறகு நோன்பு திறக்கும் பலர் உள்ளனர்.

ஜென்மாஷ்டமி நாளில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.

நாள் முழுவதும், ராதா கிருஷ்ணரின் நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

பகலில், பழங்களை மட்டும் சாப்பிடுவதை உறுதி செய்து, இரவு 12 மணிக்கு இறைவனை வழிபடும் முன், மீண்டும் ஒருமுறை குளித்துவிட்டு, சுத்தமான ஆடைகளை அணியலாம்.

சம்பிரதாயங்களின்படி பால கிருஷ்ணரை வணங்கி, ஆரத்தி செய்யவேண்டும் இதற்குப் பிறகுதான் நோன்பை முடிக்கவேண்டும்.

இந்த நன்னாளில் அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி நிலவ கிருஷ்ண பகவானை வழிபடுவோம்.

இந்த ஜென்மாஷ்டமியில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிருஷ்ண பகவான் அருள் புரியட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி!

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )