தோட்டப்புற மக்களுக்கு தரமற்ற மது விநியோகமா ? மஞ்சுளவின் கூற்றுக்கு அமைச்சர் ஜீவன் கடும் கண்டனம் !
சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகள் அலுவலகத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜ நாயக்கவால் தோட்டத் தொழிற்சங்கங்கள் தொடர்பாக தொலைக்காட்சியொன்றில் வெளியிட்டுள்ள கருத்துக்கு நீர்வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும் இ.தொ.கா. பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் பெருந்தோட்ட மக்களை இலக்கு வைத்து தரமற்ற மது பாவனையை மலையக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வருவதாக பணிப்பாளர் மஞ்சுள கஜ நாயக்கவால் முன்வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி அண்மையில் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பாகியது.
இதற்கு கண்டனம் தெரிவித்துஅமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இன்றைய காலக்கட்டத்தில் பெருந்தோட்ட சமூகத்தை பொறுத்தவரை கல்வியாலும் சரி, ஏனைய துறைகளாலும் சரி வளர்ச்சியடைந்து வரும் சமூகமாக காணப்படுகிறது.
ஆனால் ஒரு சில அரசியல் நபர்களுக்காகவும் அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் தனிநபர்களால் குரல் எழுப்பி மலையகத்தை இலக்கு வைத்து தவறான கருத்துகளை ஊடகத்தினூடாக வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
இதற்கப்பால் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிப்பதனூடாக மலையக மக்களின் வாழ்க்கை சுபீட்சமாக அமையுமென்று அவர்களுக்கு நன்றாக தெரியும்.
அதாவது ஒரு சில பகுதிகளில் இவ்வாறான தவறான செயற்பாடுகள் இடம்பெறுமாயின்,
நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரை எந்தவொரு தொழிற்சங்கமும் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளை செய்வதற்கு உடன்படப் போவதுமில்லை.
இதற்கு மக்களும் தயாருமில்லை. எனவே தேர்தல் காலங்களில் இவ்வாறான
பொய்யான தேர்தல் பிரசாரங்களை பரப்பி அவர்களை பலப்படுத்திக் கொள்வதற்காககருத்துகளை ஊடகத்தினூடாக வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
ஆனால் அவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்க மலையகத்தில் இருக்கும் அனைத்து தொழிற்சங்கமும் தம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதுடன், சட்ட நடவடிக்கை
எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் ஒன்றிணைந்த மனுவும் கையளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.