ஜனாதிபதி ஏன் போகின்றீர்கள்? பயமா? பதிலளிக்க முடியாதா? -சபையில் ரணிலை சீண்டிய சஜித்
ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்த சில விடயங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தலை கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பி கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையிலிருந்து எழுந்து வெளியேறிச் சென்றதால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் இன்று , நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய விசேட உரை தொடர்பில் தெளிவு பெற்றுக்கொள்ள அனுமதி வழங்க முடியுமா என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஜனாதிபதியிடம் கேட்டதற்கு ஜனாதிபதி அதற்கு அனுமதி வழங்கினார்.
அதன் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரரேமதாச எழுந்து ஜனாதிபதி தெரிவித்த சில விடயங்களை சுட்டிக்காட்டி, அதனை விமர்சித்துக்கொண்டிருந்தார்.
அதன்போது ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எழுந்து, உரை தொடர்பில் தெளிவு பெற்றுக்கொள்ளவே முடியும். உரையாற்ற தற்போது இடமளிக்க முடியாது.
அவர்களுக்கு ஜனாதிபதியின் உரை தொடர்பில் விவாதம் வேண்டுமென்றால் அதனை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி நடத்தலாம் என்றார்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்தை தொடர்ந்து முன்வைக்க ஆரம்பிக்கையில், ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து எழுந்த ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் சபையில் விவாதம் நடத்தினால் நல்லது என்றே நினைக்கின்றேன்.
அத்துடன் இவை அனைத்துக்கும் எதிர்க்கட்சித் தலைவரே பொறுப்புக் கூற வேண்டும்.
ஏப்ரல் 10ஆம் திகதி பிரதமர் பதவியை அவர் பொறுப்பேற்றிருந்தால் இவை எதுவும் நடக்கப் போவதில்லை. நான் எனது பணியை செய்துள்ளேன் என்று கூறி சபையில் இருந்து வெளியேறிச சென்றார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ஏன் போகின்றீர்கள்? ஏன் பயமா? பதிலளிக்கை முடியாதா? நான் ஜனாதிபதி உரையாற்றும் போது அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
எனக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையா? எதிர்க்கட்சித் தலைவர் எதையாவது கேட்கத் தயாராகும் போது அவரால் கேட்க முடியாது போயுள்ளது என்றார்.
இதனால் சபையில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜனாதிபதி இன்றைய தினத்தில் நேரத்தை பெற்று உரையாற்றினார்.
ஆனால் அதற்கு பின்னர் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிக்கொண்டு நேரத்தை வீணடித்து சுற்றி வளைத்து கேள்விகளை கேட்காமல் நேரடியாக பேட்டிருந்தால் ஜனாதிபதி பதிலளித்திருப்பார் என்றார்.
இதன்போது கூறிய சபாநாயகர், நீங்கள் தெளிவுபடுத்தலை மாத்திரம் கேட்டிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. எங்களுக்கு சபையின் தின நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என்று கூறி நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுத்தார்.