இலங்கை மின்சார சபைக்கு 34.53 பில்லியன் ரூபாய் இலாபம்
இலங்கை மின்சார சபை, இந்த வருடத்தின் கடந்த காலாண்டில் 34.53 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக சபையின் உயரதிகாரியொருவர்
தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் வரி செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்களுக்கு அப்பால் சுத்த இலாபமாக இந்த தொகை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 84. 67 பில்லியன் ரூபாவை இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதற்கிணங்க இந்த வருடத்தின் முதல் அரையாண்டில் மேற்படி சபை 119.20 பில்லியன் ரூபாய் இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர், கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் மின்சார சபை பெற்றுக் கொண்ட 34. 53 பில்லியன் ரூபாய் இலாபம் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தோடு முடிவடைந்துள்ள காலாண்டுடன் ஒப்பிடுகையில் 67. 2 வீத அதிகரிப்பாகும் என தெரிவித்துள்ளார்.