சம்பளத்தை அதிகரிப்பதற்கு போதிய வருமானமில்லை – ஜனாதிபதி
சம்பள அதிகரிப்பு தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், 2024ஆம் ஆண்டு அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு அரச வருமானம் வளர்ச்சியடையவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையிலேயே இதனைத் தெரிவித்தார்.
2024 ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவாக வழங்கப்பட்டது. தற்போது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிடும் போது இது போதுமானதாக இல்லை. இருப்பினும் அரசாங்கத்தினால் இயன்ற அளவில் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ரூபாயின் பெறுமதி அதிகரித்திருப்பதால், கடந்த சில மாதங்களில் இறக்குமதி பொருட்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் எரிவாயு, கனிய எண்ணெய் , பால்மா போன்றவற்றின் விலைகளும் குறைந்தன. மேலும், வட்டி வீதம் குறைவதால் தொழில் துறையினருக்கும் நிவாரணம் கிடைக்கும்.
2024 ஆம் ஆண்டிலும் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான கோரிக்கைகள் வந்தாலும் அரசாங்கத்தின் வருமானம் அதற்குத் தகுந்த வகையில் அதிகரிப்பை காட்டவில்லை.
கடந்த காலங்களில் பொறுப்பற்ற முறையில் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் எமது பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கையையும் அழித்தது. அனைத்துப் பிரிவு மக்களும் கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் கடினமான பாதையில் பயணிக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும்.
இப்போது செயற்படுத்தப்படும் பொருளாதாரத் திட்டங்களை கைவிட்டால் மீண்டும் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும். 2022 செப்டம்பர் முதல் IMF வேலைத் திட்டத்தின் மூலம் பல சாதகமான பலன்களை அடைந்துள்ளோம்.
பெரும்பாலும் வெளிநாட்டு பரிவர்த்தனைகளைச் சார்ந்து இருக்கும் சிறிய பொருளாதாரம் என்பதால், நாம் ஏற்றுமதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமைப் பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப அம்சங்களை பொருளாதார செயற்பாடுகளில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
அவ்வாறின்றி, ஒரு பொருளாதாரத்தை நீண்ட காலத்திற்கு நிலைநிறுத்த முடியாது. பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன்களை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் முறையாகப் பகிர்ந்தளிப்பதை மையமாகக் கொண்ட சமூக-சந்தை பொருளாதார அடித்தளத்தை நாம் நிறுவ வேண்டும்.
நமது பொருளாதார வலிமையை அதிகரிக்க, விரைவான பொருளாதார வளர்ச்சிப் பாதையில் நாம் பயணிக்க வேண்டும். உயர் பொருளாதார வளர்ச்சியால், நமது கடன் சுமை குறையும். அதுமட்டுமின்றி வாழ்க்கைச் செலவும் குறையும்.
தொடர்ந்தும் மக்கள் மீது சுமையேற்றும், நட்டத்தில் இயங்கும் அரச தொழில்முயற்சிகளை எமது பொருளாதாரத்தால் முன்னெடுக்க முடியவில்லை. இதற்கான மாற்றுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
தனியார் துறையின் பங்களிப்பின் மூலம் அரச நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்த முடியுமென்றால், மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றி, நட்டத்தை ஏற்படுத்தும் அரச தொழில்முயற்சிகளை அப்படியே தொடரக்கூடாது.
நாட்டில் பெருமளவிலான காணிகள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் மக்களுக்குச் சுமையேற்றும் வகையில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடந்த காலங்களில், அந்த காணிகளில் தனியார் துறையால் வெற்றிகரமான விவசாய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்ளின் மூலம் அன்றிருந்த அரசாங்கங்கள் அதிக வருமானம் பெற்றன. அந்தச் செயற்பாடுகளின் மூலம் நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணியும் கிடைத்தது.
எனவே, வர்த்தக ரீதியில் செயற்படும் ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் உள்நாட்டு தனியார் துறையின் பங்களிப்புடன் வர்த்தக ஏற்றுமதி விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்றார்.