இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிவான் நேற்று (20) உத்தரவிட்டார்.
தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து இரண்டு படகுகளில் வந்து புத்தளம் கற்பிட்டி வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர்கள் கடற்படையினர் கடந்த 5ஆம் திகதி இரவு கைது செய்தனர்.
இதன்போது, அவர்களிடமிருந்து இரண்டு விசைப் படகுகள் கடற்படையினரால் கைப்பற்றியதுடன், கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் முன்னிறுத்தப்பட்டனர்.
அதன்போது, சந்தேக நபர்களை செவ்வாய்க்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிவான் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்று (20) மீண்டும் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களின் விளக்கமறியலை நீடிக்க நீதிவான் உத்தரவிட்டார்