உலகின் மிகவும் வயதான பெண்மணி காலமானார்
அமெரிக்காவில் பிறந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உலகின் முதிய பெண்ணாக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் (1907-2024), தனது 117 வயதில் காலமானார்.
அமெரிக்காவில் பிறந்த மரியா இந்த நூற்றாண்டின் கொரோனா பெருந்தொற்று காலத்தைக் கடந்தவர். மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்கள், ஸ்பானிஷ் ப்ளூ உள்ளிட்டவற்றையும் தனது காலத்தில் பார்த்தவர் ஆவார். கடந்த 2 தசாப்தங்களை கட்டலோனிய முதியோர் இல்லத்தில் கழித்த இவர், 2023இல் கின்னசால் அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.
மரியா பிரான்யாசின் மறைவு தொடர்பாக அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள பதிவில், “மரியா பிரான்யாஸ் மோரேரோ வயது 117. எங்களை விட்டு பிரிந்துவிட்டார். அவர் விரும்பியபடியே தூக்கத்தில், அமைதியாகவும், நிம்மதியாகவும், வலியின்றி இறந்தார். மரியாவின் அறிவுரை மற்றும் கருணைக்காக நாங்கள் எப்போதும் அவர்களை நினைவில் கொள்வோம்” என்று கேட்டலான் மொழியில் தெரிவித்துள்ளனர்.
மரியா பிரான்யாஸ் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தாரிடம், எப்போது எனக்கு மரணம் வரும் என்று தெரியாது, ஆனால் மிக விரைவில் இந்த நீண்ட பயணம் முடிவுக்கு வரும். இவ்வளவு காலம் வாழ்ந்ததால் மரணம் என்னை சோர்வடையச் செய்யும், ஆனால் நான் அதை ஒரு புன்னகையுடன் சந்திக்க விரும்புகிறேன், சுதந்திரமாகவும் திருப்தியாகவும் உணர்கிறேன் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரியா பிரான்யாஸ் கடந்த 1907ம் ஆண்டு, மார்ச் 4ம் திகதி சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அவர் இளமையாக இருந்தபோது அவரது குடும்பம் ஸ்பெயினுக்கு சென்றனர். பின்னர் மரியா குடும்பத்தினர் கட்டலோனியாவில் குடியேறினர்.
அவர் கடந்த 1931ம் ஆண்டு ஜோன் மோரெட் என்பவரை மணந்தார். அவருக்கு ஒரு பெண் உள்பட மூன்று குழந்தைகள். 11 பேரக் குழந்தைகள் மற்றும் 13 கொள்ளுப் பேரக் குழந்தைகள் உள்ளனர்.
பிரானியாஸ் கடந்த மார்ச் 4, 2023-ம் ஆண்டு தனது 116வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிரான்யாசின் மரணத்தைத் தொடர்ந்து, உலகின் மிக வயதான நபர் ஜப்பானைச் சேர்ந்த டோமிகா இடூகோ என்ற பெண்மணி ஆவார். மே 23, 1908ல் பிறந்த அவர் 116 வயதுடையவர் என்று ஜெரண்டாலஜி ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.