முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி தீவிர அக்கறை !
இலங்கையில் 6 முறை பிரதமராகவும், ஒருமுறை ஜனாதிபதியாகவும் இருந்து அனுபவமும், அறிவும் உள்ள ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைவது உறுதியாகும் என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ஐக்கிய மக்கள் சக்தி மூலம், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் 14 பேர் தற்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் உள்ளனர்.
சிலவேளை சஜித் அல்லது அநுரகுமார வெற்றி பெற்றால்கூட, அவர்களினாலும் ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியாது.
சஜித்திடம், 30 பேரும், அநுரகுமாரவிடம் ஒருவரும் தற்போது எம்.பி. ஆக உள்ளனர்.
இப்படியிருக்கையில் எப்படி அவர்களினால் ஜனாதிபதியாக முடியும்? எப்படி அரசாங்கத்தை நிறுவ முடியும்? ரணில் விக்கிரமசிங்கவினால்தான் ஜனாதிபதியாகவும் முடியும், அரசாங்கத்தை அமைக்கவும் முடியும்.
ஒரேயொரு எம்.பி. பதவியைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதியாகி, நாட்டைப்பொறுப் பேற்ற ஜனாதிபதி ரணிலினால் மட்டுமே, இலங்கையை கட்டியெழுப்ப முடியும். முஸ்லிம்கள் தொடர்பில் ரணிலிடம் நான் முன்வைத்த 80 சதவீதமான கோரிக்கைகளை
அவர் நிறைவேற்றியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை விடுவிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.’ என முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.