தமிழரசு எடுக்கும் முடிவின் படி தமிழர்கள் செயற்பட வேண்டும் !
ஜனாதிபதித் தேர்தலில் நாம் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்தே முடிவை எடுக்கவுள்ளோம். எனவே, தமிழ் மக்கள், எமது கட்சி எடுக்கும் முடிவின்படி செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘வவுனியாவில் இறுதியாக நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட 33 உறுப்பினர்களில் ஒருவரைத் தவிர மற்றைய உறுப்பினர்கள் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தேவையற்ற என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் கட்சி உறுப்பினர்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கும் வகையில் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்த்தல் வேண்டும்.
ஏனெனில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவர்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதால் கட்சி உறுப்பினர்களிடையே குழப்ப நிலை உருவாகலாம். நாம் கட்சி ரீதியாகத்தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரிப்பதாக எதுவித கருத்தும் இதுவரை வெளியிடவில்லை.
அரியநேத்திரன் தனது விருப்பத்துக்கிணங்க சில கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்ப் பொது வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.
இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காகவே இவ்வாறான தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற விடயம் அரங்கேற்றப்பட்டது என்பது முற்று முழுதான உண்மை.
இந்தத் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதியாக இருக்கிறார்.
ஏனெனில் அவருக்கான அடையாளம் இல்லை. அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். இது தமிழ் மக்களை அடகு வைக்கும் செயற்பாடாகும்.
ரணில் விக்கிரமசிங்க தனக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ களம் இறங்குவார் என எதிர்பார்க்கவில்லை. ரணிலின் நினைப்பில் ஜனாதிபதித் தேர்தல் வரும்போது மொட்டுக் கட்சி தனக்கு ஆதரவளிக்கும் என்ற உணர்வே காணப்பட்டது.
தமிழ்ப் பற்றாளர்கள் ராஜபக்ஷ தரப்பினருக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்பது தெரியும். சிங்கள வாக்குகளைப் பிரிக்கும் நோக்குடனேயே நாமல் ராஜபக்ஷ போட்டியிடுகின்றார்.
இஸ்லாமிய சகோதரர்களில் ஒரு தரப்பினர் ரணில் விக்கிரமசிங்க பக்கமும், மற்றைய தரப்பினர் சஜித் பிரேமதாஸ பக்கமும் இருக்கின்றனர்.
அந்தவகையில், நாம் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்தே முடிவை எடுக்கவுள்ளோம். எனவே, தமிழ் மக்கள் எமது கட்சி எடுக்கும் முடிவின்படி செயற்படவேண்டும்.’ என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.