நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம் !

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்போம் !

தனக்கு பட்டம் பதவிகளில் ஆசைகள் இல்லாத காரணத்தினால் தான் அதிகாரத்திற்கு வந்த உடனே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்து நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஜனநாயக ஆட்சி முறையை உருவாக்குவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் நான்காவது
வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ருவன்வெல்ல தெஹியோவிட்ட பிரதேச சபை மைதானத்தில் நேற்று (18) நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதாக ஆட்சியாளர்கள் தலதா மாளிகையில் எழுதி கையொப்பமிட்டு கொடுத்தும் அந்தக் கதிரைக்குச் சென்ற பின் அதனை மறந்து விட்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதி முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என தலைவர்கள் வெட்டிக் கருத்து கூறினாலும் எந்த மாற்றமும் செய்யவில்லை

எனக்கு பட்டம் பதவிகளில் ஆசைகள் இல்லாத காரணத்தினால் நான் அதிகாரத்திற்கு வந்த உடனே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாது செய்து நாடாளுமன்றத்தை மையமாகக் கொண்ட ஜனநாயக ஆட்சி முறையை உருவாக்குவேன்

நான் அதிகாரத்தை எடுக்கவில்லை என்று பல்வேறு தரப்பினர் கூறிக்
கொண்டிருந்தாலும் ராஜபக்ஷக்கள் உள்ள இடத்தில் நான் இருப்பதில்லை.

இந்த நாட்டை அடி பாதாளத்துக்குள் தள்ளிய ராஜபக்ஷக்களுக்குப் பிரதான பாதுகாவலராக இந்த நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருந்து வருகின்றார்.

ராஜபக்ஷக்களைப் பாதுகாக்கின்ற ஐ.ஜி.பியாகவும், ராஜபக்ஷக்களைப் பாதுகாக்கின்ற பொலிஸ்மா அதிபராகவும் அவர் இருந்து வருகின்றார்.

நான் பிரச்சினைகளிலிருந்து தப்பிச்செல்வதில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கான சவால்களில் முன் நிற்கின்றேன்.

வேறு வேட்பாளர்களைக் களமிறக்கி கட்சியின் தலைமைத்துவத்தைப் பாதுகாத்துக் கொள்கின்ற நிலைப்பாட்டில் நான் இருந்தது இல்லை.

இன்னும் சில தினங்களில் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்காகத் திருடர்களுடன் டீல் இல்லாத அரசியல் ஒப்பந்தங்களுக்காக மக்களைக் காட்டிக்கொடுக்காத மக்களின் வாக்குகளைப்பெற்று அவர்களை மறந்துவிடாத நன்றிக்கடன் அறிந்த ஒரு யுகத்தை உருவாக்கி, அந்த யுகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களைப் போஷிக்கும் சுவர்ண மயமான காலமாக மாற்றி திருடர்களைப் பிடிக்கின்ற யுகமாக மாற்றுவோம்.

திருடர்கள்,மோசடிக்காரர்கள், ஊழல்வாதிகள் ஆகியோருடன் எனக்கு டீல் இல்லை.

திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகளுடன் டீல் இல்லாத காரணத்தால் ஜனாதிபதிப் பதவியைப் பொறுப்பேற்கவில்லை.

நான் இந்த ஜனாதிபதி கதிரைக்கு மக்களின் வாக்குகளாலே தெரிவு செய்யப்பட வேண்டும்.

இந்த நாட்டின் உரிமையாளராக அன்றி தற்காலிக பொறுப்பாளராகப் பொதுமக்களின் சேவகனாக இருந்து திருடர்களால் திருடப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீண்டும் நாட்டுக்குப் பெற்றுக்கொடுப்பேன்.

எல்லையற்ற விதத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பழிவாங்குதல், விரோதம், குரோதம், பேராசை என்பனவற்றைப் பயன்படுத்தி மக்களின் வாக்குப்பலத்தை இல்லாமல் ஆக்கி தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்கின்ற சுயநலத்தன்மை அதிகரித்துக்காணப்படுகின்ற ஒரு யுகத்தில் வாழ்கின்றோம்.

இந்த மக்கள் சமூகத்துக்குள் அசாதாரண தன்மையை ஏற்பட்டிருக்கின்றது.

வருமானம் பிரிந்து சென்று வறுமை அதிகரித்துக் காணப்படுகின்றது.

நாட்டில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஏழைகளாக மாறியிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு எந்தத் தீர்வும் இல்லை. கைக்குழந்தை முதல் சிறுவர்கள்
வரையும், தாய்மார்கள், இளைஞர்கள், மாணவர்கள், வயது முதிர்ந்தவர்கள் என ஒட்டுமொத்த சமூகத்தினரும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

உண்மையைப் பேசுகின்ற வெளிப்படைத் தன்மையுள்ள ஊழல், மோசடியற்ற ஒரு யுகத்தை உருவாக்கி ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்படுத்தும்.

நாட்டின் பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளது.

அது நுண் பொருளாதரத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று குறிப்பிட்டாலும், வரிசைகள் இல்லை என்றாலும், எல்லாம் ஒரு நிலைப்படுத்தப்பட்டு இருப்பதாகக்கூறினாலும் நிவாரணங்களை இல்லாது செய்து, அசௌகரியங்களை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கைததரத்தை மட்டுப்படுத்தி வரிசை யுகத்தை நிறைவு செய்திருக்கின்றனர்.

ஜனாதிபதி நினைத்தபடி நாட்டில் சுற்றுப்பயணம் செல்கின்றார்.

அடியாட்களுக்கும் நண்பர்களுக்கும் ஒப்பந்தங்களை வழங்கி இலாபங்கள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.

மக்கள் ஏழ்மைக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மூன்று வேளையும் உணவு உண்ண முடியாத மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் ஏழ்மையில் இருந்து மக்களை மீட்டெடுக்கின்ற யுகத்தை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி உருவாக்குவேன்.

தேயிலை பயிரிடப்படாத அரசின் காணிகள் மற்றும் தேயிலை பயிரிடப்படாத தனியாரின் காணிகளைப் பெருந்தோட்டங்களில் சேவை புரிகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும், தொழில் இல்லாத இளைஞர்களுக்கும் வழங்கி சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றி அவர்களின் பங்களிப்பை தேயிலை உற்பத்திக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.

நாட்டின் தேயிலை உற்பத்திக்கு அதிகளவில் பங்களிப்புச் செய்கின்ற உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.’ என திர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )