ரணிலின் ஆட்சியே இலங்கைக்கு பொற்காலம்!

ரணிலின் ஆட்சியே இலங்கைக்கு பொற்காலம்!

வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் மலையக மக்கள் உட்பட அனைத்து மக்களின் பேராதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றியை பதிவு செய்வார் அவரின் அடுத்த ஐந்தாண்டுகால ஆட்சியே இலங்கைக்கு பொற்காலமாக அமையவுள்ளது என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.

இதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட சம்பள உயர்வுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அடுத்தது காணி உரிமையையும் எமது மக்களுக்கு ஜனாதிபதி நிச்சயம் வழங்கி வைப்பார். அவரின் தலைமைத்துவத்தின்கீழ்தான் மலையகத்தில் மறுமலர்ச்சி ஏற்படவுள்ளது.

இதனால்தான் மலையக மக்கள் அவரை ஆதரிக்குமாறு கோரிவருகின்றனர். இதற்கமையவே வேலுகுமார் எம்.பியும் ஜனாதிபதிக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார். அதனை வரவேற்கின்றேன்.

அமைச்சு பதவிகளுக்காகவும், ஏனைய சலுகைகளுக்காகவும் சஜித்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களும், மக்கள் பக்கம் நின்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும். ஏனெனில் ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகியுள்ளது.
வங்குரோத்து அடைந்த நாட்டை குறுகிய காலப்பகுதிக்குள் ஜனாதிபதி மீட்டெடுத்தார்.

இலங்கையை வளமான மாற்றுவதற்குரிய திட்டங்களையும் அவர் வகுத்துள்ளார். ஜனாதிபதியின் தலைமைத்துவம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கட்டாயம் நாட்டுக்கு தேவை. அந்த காலப்பகுதியே இலங்கைக்கு பொற்காலமாக அமையவுள்ளது.

ஜனாதபதி ரணிலுக்கு பதிலாக ஏனைய வேட்பாளர்களை தேர்வு செய்தால் நாடு மீண்டும் இருண்ட யுகம் நோக்கியே செல்லும். எனவே, இது பரிசோதித்து பார்க்கும் நேரம் அல்ல, சொல்லில் அல்லாமல் செயலில் செய்துகாட்டிய தலைமைத்துவத்துடன் இணைந்து பயணிக்க வேண்டிய தருணம்.’’ என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )