மேற்குக் கரை கிராமம் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல் !
இஸ்ரேலிய குடியேறிகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை கிராமம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள வீடுகள் மற்றும் கார்கள் மீது தீவைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முகமூடி அணிந்து வந்த குடியேறிகள் கடந்த வியாழக்கிழமை (15) இரவு நப்லுஸ் நகருக்கு அருகில் உள்ள ஜிட் கிராமத்தில் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதில் தனது 20 வயதுகளில் இருக்கும் உள்ளூர் கிராமவாசி ஒருவர் கொல்லப்பட்டு மற்றும் ஒருவர் நெஞ்சில் காயத்துக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு கூறியது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
குடியேறிகளின் இந்தத் தாக்குதல் ஏற்க முடியாதது என்றும் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இவ்வாறான தாக்குதல்கள் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்து கண்டனங்களை வெளியிடுகின்றபோதும் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தவறிவருகிறது.
வன்முறையில் ஈடுபடும் குடியேறிகள் மீது தடை விதிப்பது பற்றி அமெரிக்கா கூறியபோதும் இந்த வன்முறையில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் அமெரிக்க
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காசாவில் போர் வெடித்த கடந்த ஒக்டோபர் தொடக்கம் இஸ்ரேலிய குடியேறிகளால் பலஸ்தீனர்களுக்கு எதிராக 1000க்கும் அதிகமான தாக்குதல் சம்பவங்கள்
பதிவாகி இருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமது கிராமங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு குடியேறிகளுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படை அனுமதி அளிப்பதாக பலஸ்தீனர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.