துஷ்பிரயோகத்திற்கு உள்ளான தனமல்வில சிறுமிக்கு அச்சுறுத்தல் : விசாரணைகள் ஆரம்பம் !
தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவர்களினால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட 16 வயதான சிறுமியின் பெற்றோருக்கு, அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளை நடத்தும் பொலிஸ் தலைமையக அதிகாரி என தெரிவித்து, அடையாளம் தெரியாத நபர்களினால் இவ்வாறு அழைப்புக்கள் வருவதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, மாணவியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, இந்த சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதுடன், சந்தேகநபர்கள் அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபர், உப அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் என நான்கு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கொழும்பு பொரள்ளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.