இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு 40,000ஐ தாண்டியது !

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்பு 40,000ஐ தாண்டியது !

காசாவில் ஓர் ஆண்டை நெருங்கும் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 40,000ஐ தாண்டியுள்ள நிலையில், போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தத்திற்கு மத்தியில் கட்டாரில் நேற்று புதிய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

கட்டார் தலைநகரில் நேற்று இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் எகிப்து உளவுப் பிரிவு தலைவர்கள் பங்கேற்றனர்.

காசாவில் 10 மாதங்களுக்கு மேல் நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 115 பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பிலேயே பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டது மற்றும் ஹிஸ்புல்லா முன்னணி தளபதி ஒருவர் பெய்ரூட்டில் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது பழிதீர்க்க ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புகள் உறுதிபூண்டிருக்கும் நிலையிலே பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

காசாவில் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டால் பிராந்தியத்தில் பதற்றம் தணியும் என்று அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.

எனினும் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் இஸ்ரேல் முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றம்சாட்டும் ஹமாஸ் அதிகாரிகள் நேற்றைய பேச்சுவார்த்தையில் இணையவில்லை.

எவ்வாறாயினும் கூட்டத்திற்குப் பின்னர் மத்தியஸ்தர்கள் டோஹாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர்களுடன் கலந்துரையாட திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இஸ்ரேலிய பிரதிநிதிகளில் அதன் உளவுப் பிரிவு தலைவர் டேவிட் பார்னி, உள்நாட்டு பாதுகாப்பு சேவை தலைவர் ரோனன் பார் மற்றும் இராணுவத்தின் பணயக்கைதிகள் தலைவர் நிட்சான் ஆலோன் ஆகியோர் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. வின் பணிப்பாளர் பில் பர்ன்ஸ் மற்றும் அமெரிக்காவின் மத்திய கிழக்கிற்கான தூதுவர் பிரெட் மக்கர்க் ஆகியோர் அமெரிக்கா சார்பில் பங்கேற்றிருப்பதோடு எகிப்து உளவுப் பிரிவு தலைவர் அப்பாஸ் கமால் மற்றும் கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி ஆகியோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஒன்றை எட்டமுடியாததற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிளவுகள் நீடிக்கும் சில விடயங்களில் தளர்வுப்போக்கை காண்பிக்க பேச்சுவார்த்தையாளர்களுக்கு அனுமதி அளித்திருப்பதாக நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதில் காசாவில் இஸ்ரேலிய துருப்புகள் நிலைகொள்வது அதேபோன்று பணயக்கைதிகளை விடுவிப்பதன் வரிசை முறை மற்றும் வடக்கு காசாவை அணுகுவதற்கான கட்டுப்பாடுகளில் இஸ்ரேல் தளர்வை செய்ய முன்வந் திருப்பதாக
கூறப்படுகிறது.

இந்நிலையில் காசாவில் போருக்குப்பின்னர் அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் தலையீட்டை நிராகரித்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, அந்த அமைப்பின் முந்தைய முன்மொழிவுகளுடன் இணங்கிய வகையில் இஸ்ரேலின் முன்மொழிவு அமையும் பட்சத்தில் இந்தப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட ஹமாஸ் விருப்பத்தை வெளியிட்டிருப்பதாக அந்தஅமைப்பின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை செயற்பாடுகளுக்கு ஆதரவு அளிப்பதாக ஹமாஸ் சிரேஷ்ட அதிகாரியான சமி அபூ சுஹ்ரி நேற்று குறிப்பிட்டிருந்தார். கடந்த ஜூலை ஆரம்பத்தில் ஹமாஸ் இணங்கிய முன்மொழிவு ஒன்றுக்கு இஸ்ரேலின் கடப்பாட்டை பெறுவதற்கு மத்தியஸ்தர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

அது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் காசாவில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் முழுமையாக வாபஸ் பெறுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

கட்டாரில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் கூட காசாவில் மோதல்கள் மற்றும் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

இஸ்ரேலிய துருப்புகள் நேற்று தெற்கு நகரங்களான கான்யூனிஸ் மற்றும் ரபாவில் கடும் தாக்குதல்களை நடத்தியது.

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 40 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 107 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

காசாவை சின்னாபின்னமாக்கி இருக்கும் இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 40,005 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 92,401 பேர்
காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சு கூறியது.

இதில் 10,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதோடு இவர்கள் கொல்லப்பட்டு மற்றும் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தப் போரினால் காசாவின் 2.3 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட
அனைவரும்போல் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அண்மைய நாட்களாக தெற்குகாசாவின் மிகப்பெரிய நகரான கான்யூனிஸில் இருந்து மக்களை வெளியேற உத்தரவிட்ட இஸ்ரேலியப் படை தென்கிழக்கு காசாவில் உள்ள மக்கள் மீது புதிய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

இவ்வாறு வெளியேறும் மக்களை மனிதாபிமான வலயங்களுக்கு செல்லும்படி இஸ்ரேல் கூறுகின்றபோதும் அங்கும் இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

காசாவில் எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

‘இது போதும் காசா நகரில் உள்ள எமது வீட்டுக்கு நாம் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு மணி நேரமும் குடும்பங்கள் கொல்லப்படுகின்றன, வீடுகள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன’ என்று மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் தமது குடும்பத்துடன் அடைக்கலம் பெற்றிருக்கு 30 வயது ஆயா ரோய்ட்டர்ஸுக்கு கூறினார்.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் பலாத் அகதி முகாமில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மேற்குக்கரையின் துபாஸ் பகுதியில் நேற்றுமுன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே புதிய தாக்குதல் இடம்
பெற்றுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையிலும் பதற்றம் நீடித்து வருகிறது.

இதன்படி இந்தக் காலப்பகுதியில் மேற்குக் கரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 632 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 142 சிறுவர்கள்,ஒன்பது பெண்கள் மற்றும் ஏழு வயோதிபர்கள் இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசா போர் இஸ்ரேலின் வடக்கு எல்லையிலும் மோதல்களை தூண்டியுள்ளது.

இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் தெற்கு லெபனானில் இருவர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

தமது போராளிகள் இருவர் கொல்லப்பட்டதை லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்துள்ளது.

காசாவில் போர் ஆரம்பித்தது தொடக்கம் லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலிய படை கிட்டத்தட்ட தினசரி பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )