
வறுமை ஒழிப்பிற்காக பிரஜா சக்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை
வறுமை ஒழிப்பிற்காக பல்வித அணுகுமுறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்;
தற்போது இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையில் 06 பேரில் ஒருவர் பல்பரிமாண வறுமைக்குட்பட்டதாக இருப்பதுடன், குறித்த சனத்தொகையில் 95.3% வீதமானவர்கள் கிராமிய மற்றும் பெருந்தோட்டங்களில் வாழ்கின்றனர்.
இலங்கையில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட வறுமையொழிப்பு வேலைத்திட்டங்களின் இறுதிப் பெறுபேறுகள் பற்றி எந்தவொரு தரப்பினரும் திருப்தியடையவில்லை என்பதைக் கருத்துக்கள் மூலம் காணக்கூடியதாகவுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக வறுமையொழிப்பு நலனோம்புகை வேலைத்திட்டங்கள் மூலம் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் எண்ணிக்கையும், அதற்காக செலவிடப்பட்டுள்ள நிதியும் படிப்படியாக அதிகரித்துள்ளது.
2000 ஆம் ஆண்டில் 1.10 மில்லியன் பயனாளிகளும், 2010 ஆம் ஆண்டில் 1.57 மில்லியன் பயனாளிகளாக அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் 1.79 மில்லியன் பயனாளிகள் வரை அதிகரித்துள்ளது.
இந்நிலைமையை தொடர்ச்சியாகப் பேணிச் செல்வது நாட்டின் பொருளாதாரம் மற்றும் உற்பத்திச் செயன்முறைக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், இடர்களுக்கு உள்ளாகக்கூடிய குழுவினரை மாத்திரம் முறைசார்ந்த சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தில் உள்வாங்குவதற்கும், ஏனையவர்களை பொருளாதாரச் செயன்முறையில் முனைப்பான பங்காளர்களாக மாற்றுவதற்கும் படிப்படியாக முறையாகத் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்த வேண்டியுள்ளது.
அதற்கிணங்க, புதிய அரசின் கொள்கைக்கமைய ‘வளமான நாடு – செழிப்பான வாழ்க்கை’ எனும் தொலைநோக்கை வெற்றியடையச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் பல்வித அணுகுமமுறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாக ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தினார்.