
சட்டவிரோதமாக மாடுகளை கடத்தி சென்றவர் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி பொலிஸார் நேற்று (24) இரவு கைது செய்துள்ளதுடன், கடத்தி செல்லப்பட்ட 18 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய பாரவூர்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த பாரவூர்தியை வழிமறித்து சோதனையிட்டனர்.
அதன்போது , பாரவூர்திக்குள் 18 மாடுகள், மிக நெருக்கமாக அடைக்கப்பட்டு இருந்தன. குறித்த பாரவூர்தி மாடுகளை கடத்தி செல்லும் போது, காற்று வருவதற்காக மேல் பகுதிகளில் சில பகுதிகள் விலக்கப்பட்டு இருந்ததுடன், உள்ளே மாடுகளை கட்டி வைப்பதற்காக கம்பிகள் பொருத்தப்பட்டும், மாடு கடத்தல்களுக்காக என பிரத்தியோகமாக பாரவூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பிரதீபன்