
2025 வரவு செலவு திட்டம் – இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று
தற்போதைய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
இன்று மாலை 6 மணியளவில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, இரண்டாவது வாசிப்பிற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதியமைச்சராக பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதன்படி, பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் நடைபெற்று வந்த நிலையில், இன்று அதன் இறுதி நாளாகும்.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பைத் தொடர்ந்து, குழு நிலை விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், அதற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இம்முறை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று பாராளுமன்ற ஒத்திவைப்பு தீர்மானம், பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி பெரேராவால் ப்ரெயில் (Braille) முறையில் முன்வைக்கப்பட்டது.
இது வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த சம்பவம் என்று, அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.