
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு தகுதி
நேற்று இடம்பெற்ற ICC சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழு A போட்டியில் நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த வெற்றியுடன் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பில் பங்களாதேஷ் அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 77 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டார்.
ஜாகெர் அலி 45 ஓட்டங்களையும், ரிஷாத் ஹொசைன் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
நியூசிலாந்து அணி சார்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்படி, 237 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி, ரச்சின் ரவீந்திரவின் அற்புதமான சதம் (112 ஓட்டங்கள்) மற்றும் டொம் லாதத்தின் அரைச்சதம் (55 ஓட்டங்கள்) ஆகியவற்றால் 45.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஆரம்பத்தில் வில் யங் (0) விரைவாக ஆட்டமிழந்த போதிலும், ரவீந்திரவும் லாதத்தும் இணைந்து சிறப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த வெற்றியால் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் குழு A-லிருந்து அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.