
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி
அக்கரைப்பற்று, அம்பாறை பிரதான வீதியில் நேற்று (20) மாலை கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உட்பட இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளர்.
உயிரிழந்தவர்கள் ஆலையடிவேம்பு சாய்ராம் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய பவிகாஸ் மற்றும் அதே வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய தவராசா விதுஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் அம்பாறையிலிருந்து அக்கரைப்பற்று ஆலையடிவேம்புவில் உள்ள தங்கள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அக்கரைப்பற்றுவிலிருந்து அம்பாறை நோக்கிச் சென்ற கனரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் அரசடி பகுதியில் உள்ள வளைவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.