
கொத்து தயாரித்தவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம்
யாழ்ப்பாணத்தில் சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து றொட்டி தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பகுதியில் பொது சுகாதார பரிசோதகரான ம.ஜெயப்பிரதீப் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது , சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த உணவக உரிமையாளருக்கும் , மற்றுமொரு உணவகத்தில் மலசல கூடத்தினுள் மின் மோட்டாரை இயக்கி , நீர் வழங்கி வந்த நபருக்கும் எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று (20) நடைபெற்ற போது உரிமையாளர்கள் இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத்து தயாரித்த உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் , மலசல கூடத்தினுள் மின் மோட்டாரை இயக்கிய உரிமையாளருக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் கடையினை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு கட்டளையிட்டது.
நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் குறித்த உணவகம் பொது சுகாதார பரிசோதகரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
பிரதீபன்