
எதிரணிகள் சில காரணங்களை கூறி தேர்தலை பிற்போடுவதற்கு முற்படுகின்றனர்
உள்ளாட்சிசபைத் தேர்தல் இயலுமானவரை கூடியவிரைவில் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நேற்று முன்தினம் (19) நடைபெற்றது.
இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட ரில்வின் சில்வா கூறியவை வருமாறு,
” உள்ளாட்சிசபைத் தேர்தல் தொடர்பில் எமது தரப்பு கருத்துகள், தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டன. கடந்த காலங்களில் வேண்டுமென்றே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிதாக வேட்புமனு கோரும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், மக்கள் மத்திக்கு செல்வதற்கு அஞ்சும் எதிரணிகள், சிற்சில காரணங்களைக்கூறி தேர்தலை பிற்போடுவதற்கு முற்படுகின்றனர். தோல்வி பயத்தாலேயே இப்படியான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
உள்ளாட்சித்தேர்தலை விரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, தேர்தல் ஆணைக்குழுவுக்கு இயலுமானவரை விரைவில் தேர்தலை நடத்துமாறு நாம் கோரினோம். மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துமாறும் கோரினோம்.
விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்ற தகவலை தேர்தல் ஆணைக்குழுவினர் எம்மிடம் தெரிவித்தனர்.
பொதுத்தேர்தலை நாம் எவ்வித ஆரவாரமும் இன்றி அமைதியாக நடத்தினோம். எனவே, நீதியான முறையில் அமைதியான தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை நாம் ஏற்படுத்துவோம்.” என தெரிவித்துள்ளார்.