
உள்ளூராட்சி தேர்தலை விரைவுபடுத்த வேண்டும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முடிந்தளவு விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
வரவுசெலவுத் திட்டம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு இடையூறாக இருக்காது என்றும் அந்தக் கட்சி உறுப்பினர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருக்கிறார்கள்.
இதேவேளை, மிக விரைவாக தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்ககை எடுப்பதாக ஆணைக்குழுவும் இதன்போது ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவிக்கையில்,
”உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது அமைச்சரினால் ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்டது மாத்திரமல்லாமல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது வரையில் இரண்டரை வருடங்கள் தேர்தல் காலதாமதமாகியுள்ளது. அடிமட்டத்திலான மக்கள் பிரதிநிதிகள் இன்மையினால் மக்களும் பெரும் சிக்கலை சந்தித்துள்ளார்கள்.
பழைய வேட்புமனுக்களின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக பழைய வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தது. அதற்கான திருத்தச் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, தேர்தலை நடத்துவதற்கான உரிமை தேர்தல் ஆணைக்குழுவுக்கே இருக்கிறது.
இந்நிலையில் ஒருசிலர் தேர்தலை காலந்தாழ்த்துவதற்கும் முயற்சித்து வருகிறார்கள். தேர்தலை நடத்துவதற்கு இருந்த சகல தடைகளையும் நிவர்த்தி செய்ததன் பின்னர் தேர்தலை ஒத்திவைக்க மீண்டும் முயற்சிக்கிறார்கள் என்றால் அது ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடாகும்.
தேர்தல் ஆணைக்குழுவுக்கு இருக்கும் அதிகாரத்துக்கமையவும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமையவும் ஆணைக்குழுவால் முடிந்த தினத்தில் உள்ளூராட்சித் தேர்தலை மிக விரைவில் நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம். அதனை ஆணைக்குழுவும் ஏற்றுக்கொண்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு இன்னும் திகதியை தீர்மானிக்கவில்லை.
விரைவில் அதுதொடர்பில் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறோம். தோல்வியை கண்டு பயங்கொள்வதாலேயே பல்வேறு காரணங்களைக்காட்டி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிக்கிறார்கள். எது எவ்வாறாக இருந்தாலும் உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் மாதத்திலேயே இடம்பெறும். வரவு செலவுத் திட்டம் தேர்தலுக்கு இடையூறாக அமையாது. அடுத்த மாதத்தில் வரவு செலவுத் திட்டம் நிறைவடைந்துவிடும்.” என தெரிவித்துள்ளார்.