
சபாநாயகருக்கும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
கொரியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் மியோன் லீ, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை நேற்று (18) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஹானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பில் வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சுற்றுலா ஆகிய பிரதான துறைகளில் இரு தரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது தொடர்பில் சபாநாயகரும், தென்கொரியத் தூதுவரும் கருத்துக்களைப் பரிமாறினர். இந்தத் துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதன் ஊடாக பரஸ்பர அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் தமது உறுதிப்பாட்டை இருதரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.
கொரிய குடியரசின் ஒத்துழைப்புடன் தற்பொழுது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து தென்கொரியத் தூதுவர் மியோன் லீ விளக்கமளித்தார்.
இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தென் கொரியாவின் தொடர்ச்சியான ஆதரவு இருக்கும் என்பதை உறுதிப்படுத்திய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான நம்பிக்கையும் வெளிப்படுத்தினார்.