ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல்

ஆசிரியர்கள் பயணித்த வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல்

ஆசிரியர்கள் பயணித்த பஸ்ஸின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் கோரியுள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து ஆசிரியர்களை ஏற்றி வந்த பஸ்ஸின் மீது பளை பகுதியில் கல்வீசி தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஆசியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு வாடகை ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஒன்றின் மூலம் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்று வரும் நிலையில், பளை பகுதியில் வைத்து வாகனத்தின் மீது நேற்று (18) கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் ஆசிரியர்கள் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தையும் அதனுடன் தொடர்புடையோரின் வன்முறை செயற்பாட்டையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நேற்று முன்தினம் (17) தனியார் சிலருடன் இணைந்து போக்குவரத்து பொலிஸாரால் குறித்த வாகனம் பரந்தனில் வழிமறிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வாகன சாரதி உள்ளிட்ட ஆசிரியர்கள் சிலர் அச்சுறுத்தப்பட்டிருந்ததாகவும், கஷ்டப்பிரதேச பாடசாலைகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து பிரச்சினைகளுக்காக தாம் இவ்வாறு வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்தி சென்று வருவதாக தெரிவித்தபோதும் பொலிஸார் அவ்வாறு செல்லமுடியாது என்று தெரிவித்து தண்டம் விதித்துள்ளனர்.

குறித்த பொலிஸாரின் அடாவடித்தனத்தின்போது வேறு நபர்கள் சிலர் அருகில் இருந்ததாகவும், அவர்களின் தூண்டுதலின் பேரிலேயே ஆசிரியர்கள் பயணித்த வாகனத்துக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் இத்தகைய முறையற்ற செயற்பாடுகளின் பின்னணியில் சிலர் செயல்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை முல்லைத்தீவிலிருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் திரும்பும் வழியில் பளைப் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் செயற்பாட்டுக்கும், ஆசிரியர்கள் மீதான நேற்றைய தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாகவே பாரிய சந்தேகம் எழுகின்றது.

இவ்விடயம் குறித்து வடமாகாண ஆளுநர் உடனடியாக பொருத்தமான நடவடிக்கை மேற்கொண்டு குறித்த குற்றத்தைப் புரிந்தவர்களும் உடந்தையாக செயற்பட்டவர்களும் உடனடியாக கைது செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ஆசிரியர்களின் போக்குவரத்து மற்றும் விடுதி வசதிகள் குறித்து எந்தவொரு கரிசனையும் அற்று செயற்படும் அரசாங்கம், ஆகக்குறைந்தது ஆசிரியர்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கேனும் ஆவனம் செய்ய வேண்டும்.

பொலிஸார் முறையற்ற வகையில் செயற்படுவதையும் ஏனையவர்களுக்கு முறையற்ற வகையில் உடந்தையாக செயற்படுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.

குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கும் அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )