உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு

உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு

உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு இன்று (18) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்புடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

உடல் உறுப்பு தான தேசிய தினம் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 18ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது, இது இந்த ஆண்டு 7ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு, வைத்தியசாலை வளாகத்தில் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுப் பலகைக்கு பிரதமர் தீபம் ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

“ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் உடல் உறுப்பு தான தேசிய தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்காக வைத்தியசாலைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். உறுப்புகளை தானம் செய்து நம்பிக்கையின்றி வாழ்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த நிகழ்வு ஒரு ஆறுதல். அவர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

உயிர் வாழச்செய்ய முடியாது போன நோயாளியின் உறுப்புகளை உயிருக்காக போராடும் நோயாளிக்கு தானம் செய்வது மிகவும் மனிதாபிமானமிக்க செயலாகும். மூளைச்சாவு அடைந்த ஒருவருக்கு மற்றுமொருவரை உயிர் வாழச்செய்ய முடியும்.

உயிர்வாழ கடினமாக இருக்கும் நோயாளியின் உறுப்புகளை தானம் செய்ததற்காக அந்த குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு மிகவும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் கருணையான முடிவுகளை எடுக்கும் பலத்தினைப் பெற்ற அந்தக் குடும்பங்களுக்கு நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் தன்னலமற்ற செயல்களால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. அதைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கலாம். அதன் மூலம் உங்களைப் பிரிந்தவர்கள் நீண்ட காலம் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற உணர்வை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

நமது பண்பாட்டின் மூலம், நமது மதங்கள் மூலம் கிடைத்த இந்த தானம் செய்யும் பண்பு மிக உயர்ந்த நற்செயலாகும். அந்த பரோபகார சிந்தனை நமது நாட்டின் கலாசாரத்திலும் இலங்கையர் என்ற அடையாளத்திலும் வலுவானதாக இருப்பதை நான் பார்க்கின்றேன். இது போன்ற சமயங்களில் மட்டுமல்ல, ஒரு அனர்த்தம் ஏற்படும் போதும், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போதும், நாம் வேற்றுமைகளை எல்லாம் மறந்து, இந்த பரோபகார சிந்தை வெளிப்படுகிறது. இது பாதுகாக்கப்பட வேண்டிய மற்றும் பாராட்டப்பட வேண்டிய ஒரு பண்பு, அதுவே இலங்கையர் என்ற வகையில் எமக்குக் கிடைத்துள்ள பலமாகும்.

கடந்த சில வருடங்களில் உலகிலேயே அதிகளவு கண் தானம் செய்பவர்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது. மேலும், நம் நாட்டில் பலர் உறுப்புகள் மற்றும் ஏனைய இழையங்களை தானம் செய்கிறார்கள்.

இந்த செயல்முறை மேம்படுத்தப்பட வேண்டும். தேவையான சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதை வணிகச் செயலாகச் செய்யக்கூடாது. இதனை தேசிய மட்டத்தில் பலப்படுத்தும் வகையில் எமது அமைச்சு தலையீடு செய்யும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனவே, சரியான முறைமையொன்றை அறிமுகப்படுத்தல் மற்றும் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய விடயங்களுக்கான பின்னணியை தயார்படுத்துவதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இதற்காக நடவடிக்கை எடுத்த அனைத்து மருத்துவ நிபுணர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், குறிப்பாக உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் இந்த தன்னலமற்ற செயலுக்கு உறுதுணையாக இருந்து இன்னொருவருக்கு வாழ வாய்ப்பளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவுப் பலகை மற்றும் அன்பளிப்புகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )