
பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு
பாகிஸ்தானின் வர்த்தகத் தூதுக்குழுவினர் நேற்று (18) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை சந்தித்தனர். மருந்துத் தயாரிப்பு, உணவு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த முன்னணி வர்த்தகர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகித்தனர்.
இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் மொஹமட் முனீர் முலாபர், பாராளுமன்ற உறுப்பினர் சித்ரால் பெர்னான்டோ, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, லாகூரில் உள்ள இலங்கைத் தூதுவர் யாசின் ஜோய்யா ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கும், அரசாங்கத்திற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்த பாகிஸ்தான் வணிகத் தூதுக்குழுவினர், நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் அவற்றின் வெற்றிக்குத் தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தனர். இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால வர்த்தக உறவுகளைச் சுட்டிக்காட்டிய அவர்கள், இரு நாட்டுக்கும் பரஸ்பர நன்மைகளை ஏற்படுத்தும் வகையில் இந்த உறவுகளை மேலும் பலப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

வணிகச் செயற்பாடுகளுக்கு ஏற்ற நிலையான மற்றும் உகந்த சூழலை இலங்கை வழங்கி வருகின்றது என சபாநாயகர் இங்கு சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என பாகிஸ்தானிய வர்த்தகக் குழுவுக்கு அழைப்பு விடுத்த சபாநாயகர், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதன் முக்கியத்துவத்தைவும் வலியுறுத்தினார்.

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய பாராளுமன்றங்களின் சங்கத்தின் ஆசிய மற்றும் தெற்காசிய பிராந்தியங்களின் முதலாவது ஒன்றிணைந்த மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது வழங்கிய வரவேற்பையும் சபாநாயகர் நினைவுகூர்ந்தார்.