போதியளவு நீர் அருந்துங்கள்

போதியளவு நீர் அருந்துங்கள்

வெப்பமான வானிலை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் 5 மாகாணங்களிலும் சில பிரதேசங்களிலும் வெப்ப குறியீடு மனித உடலுக்கு உணரும் வெப்பம் குறிப்பிடத்தக்க அளவு இன்று(19)  அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு, வட மத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்குமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, போதியளவு நீர் அருந்துமாறும், முடிந்தளவு நிழலில் இளைப்பாருமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

நிலவும் வெப்பமான வானிலையினால் நீர் விநியோகத்தில் தடங்கல் தொடர்பில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

நீர் நிலைகளில் நீர்மட்டம் சடுதியாக குறைந்து வருவதாகவும் அதிக வெப்பத்தினால் மக்களின் நீர் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் அனைவரின் அத்தியாவசிய குடிநீர், சுகாதாரத் தேவைகளுக்கு சமமான முறையில் நீர் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வாகனங்களை கழுவுதல், வீட்டுத் தோட்டம் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக நீரைப் பயன்படுத்துவதை குறைத்து நாளாந்த தேவைகளுக்காக மாத்திரம் நீரைப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )