
தமிழ் இளைஞனை நாய்களை விட்டு துன்புறுத்திய சம்பவம் : முறையாக விசாரணை வேண்டும் – மனோ கணேசன்
சிங்கள தோட்ட அதிகாரியால், தமிழ் இளைஞர் ஒருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு நாய்களை விட்டு துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். இதனை எம்மால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(17) நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைகள் ( விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘உடுகம ஹோமாதொல தோட்டத்தில் காபில் பிரிவில் சேவையாற்றும் காமினி கிங்ஸ்லி என்ற தோட்ட அதிகாரி மனிதாபிமானமற்ற வகையில் அத்தோட்ட பகுதியில் லயன் அறையில் வாழும் தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
தமிழ் இளைஞர் தோட்ட அதிகாரியால் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு நாய்களை விட்டு துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். இதனை எம்மால் பார்த்துக் கொண்டிக்க முடியாது.
தமிழ் இளைஞன் சிங்கள அதிகாரியை இவ்வாறு தாக்கியிருந்தால் கலவரம் தோற்றம் பெற்றிருக்கும். ஆகவே முறையாக விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது .இதனை இனவாத வைரஸ் என்றே குறிப்பிட வேண்டும். தமிழ் இளைஞனை நிலத்தில் வீழ்த்தி, நாய்களை கடிப்பதற்கு ஏவி விடுகிறார்கள்.
ஒரு தரப்பினர் சுற்றியிருந்து வேடிக்கை பார்க்கிறார்கள்.பிரச்சினை என்னவென்று தெரியாது, யார் தவறிழைத்தார்கள் என்பதும் தெரியாது.இதனை பொலிஸார் பார்க்க வேண்டும்.
ஒரு இளைஞனை நிலத்தில் தள்ளி நாய்களை கடிப்பதற்கு ஏவி விடுவது முற்றிலும் தவறு. இதனை என்னால் பார்க்க முடியவில்லை.
ஹோமாதொல தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை செய்து நீதிமன்றத்துக்கு குற்றவாளிகளை முன்னிலைப்படுத்துங்கள்’ என நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்