
கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்
இலங்கையின் இசை ஆளுமையான ‘கலாசூரி’ ‘தேச நேத்ரு’ கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் திங்கட்கிழமை (17) அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பல அடையாளங்களை கொண்டவர்.
இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கு தென்னிந்திய இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் முதலிய கலைகளை கற்பித்து, ஆற்றல் மிகுந்த விரிவுரையாளராக வலம் வந்தவர்.
அதனால் இவரது பெயரிலேயே பல்கலைக்கழகத்தின் கட்புல, கலை, நாட்டிய, சங்கீத பீடத்துக்கான கட்டடமொன்று இயங்கி வருகின்றது.
அன்னாரின் மறைவு இலங்கையின் கலைத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.