பரீட்சைக்கு தாமதம் ஆனதால் பாராகிளைடிங்கில் பறந்த மாணவர்

பரீட்சைக்கு தாமதம் ஆனதால் பாராகிளைடிங்கில் பறந்த மாணவர்

பொதுவாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு பஸ், ஆட்டோ, சைக்கிள், மோட்டார் சைக்கிளில் செல்வார்கள். சாலை போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் படகுகளில் ஆறு, குளம், ஏரியை கடந்து கல்வி நிலையங்களுக்கு சென்று வருவதை பார்க்கிறோம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலம் சத்தாராவில் மாணவர் ஒருவர் பாராகிளைடிங்கில் பறந்து கல்லூரிக்கு சென்ற வினோத சம்பவம் நடந்து உள்ளது.

அங்குள்ள சத்தாரா மாவட்டம் வைய் தாலுகா பசராணி கிராமத்தை சேர்ந்தவர் சமர்த் மகான்காடே (வயது19). இவர் சம்பவத்தன்று சத்தாராவில் உள்ள பஞ்சகனி மலை பகுதிக்கு சென்றிருந்தார். திட்டமிட்ட நேரத்துக்குள் அவரால் அங்கு இருந்து புறப்பட முடியவில்லை. எனவே அவர் கல்லூரிக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பரீட்சை என்பதால் அவர் கல்லூரிக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

எனினும் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. எனவே வாகனத்தில் சென்றால் கண்டிப்பாக கல்லூரிக்கு நேரமாகிவிடும் என்பதால் எப்படி செல்வது என யோசித்து கொண்டு இருந்தார்.

அப்போது மலைப்பகுதியில் உள்ள பாராகிளைடிங் சாகச விளையாட்டு குழுவினர் மாணவரை சரியான நேரத்துக்கு கல்லூரி செல்ல உதவுதாக கூறினர். அவர்கள் பாராகிளைடிங் மூலம் மலைக்கு கீழே உள்ள பகுதியில் இறக்கிவிடுவதாக உறுதி அளித்தனர். மாணவரும் தைரியமாக அதற்கு ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாராகிளைடிங் குழுவை சேர்ந்த ஒருவர், உரிய பாதுகாப்பு முன்எச்சரிக்கையுடன் மாணவரை பாராகிளைடிங் மூலம் பறக்க செய்து மலைப்பகுதிக்கு கீழே இறக்கிவிட்டார். இதனால் மாணவரும் சரியான நேரத்தில் கல்லூரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

தேர்வுக்காக மாணவர் ஒருவர் பாராகிளைடிங்கில் பறந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் 35 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் அந்த வீடியோவை பார்த்து உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)