மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்

சுராசந்த்பூர், பிஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களில் இந்த மோதல், கலவரமாக மாறியது. வீடுகள், கடைகளுக்கு தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. மற்ற மாவட்டங்களுக்கும் கலவரம் பரவியது.

இந்த கலவரம் சுமார் 2 ஆண்டுகளாக நீடித்தது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி, நிவாரண முகாம்களில் தங்கினர்.

ஊரடங்கு உத்தரவு போட்டும் கலவரம் அடங்கவில்லை. இரு சமூகங்களை சேர்ந்த ஆயுதக்குழுக்கள், துப்பாக்கி சண்டையிலும் ஈடுபட்டு வருகின்றன.

மத்திய, மாநில அரசுகள் கலவரத்தை ஒடுக்க தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. நாடாளுமன்றத்திலும் பிரச்சினை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாததையும் விமர்சித்தனர். வன்முறையை ஒடுக்கி, அமைதியை நிலைநாட்ட தவறியதாக ஒரு மாதத்துக்கு முன்பு, மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பைரேன்சிங் மன்னிப்பு கோரினார்.

இந்தநிலையில், மணிப்பூர் முதல்-மந்திரியாக இருந்த பிரேன் சிங் கடந்த 9-ம் திகதி கவர்னர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதனையடுத்து அவரது ராஜினாமா கடிதத்தை அஜய் குமார் பல்லா ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அரசியலமைப்பின் 356வது பிரிவின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு பிறப்பித்து உள்ளார்.

புதிய முதல்-மந்திரியை பாஜக தேர்வு செய்வதற்கான அவகாசம் முடிந்தும் யாரும் தேர்வு செய்யப்படவில்லை. 6 மாதங்களுக்குள் சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற கெடு நேற்றுடன் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூரில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி:

* 1967-ம் ஆண்டு ஜனவரி 12-ந் திகதி முதல் 1967 மார்ச் 19-ந் திகதி வரை ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. அப்போது மணிப்பூர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

* மணிப்பூர் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆட்சி கவிழ்ந்தது. இதனால் மீண்டும் 2-வது முறையாக 1967-ம் ஆண்டு அக்டோபர் 25-ந் திகதி முதல் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் திகதி வரை மொத்தம் 118 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

* மணிப்பூர் மாநிலத்துக்கு மாநில தகுதி வழங்க கோரி ஆயுத கிளர்ச்சியில் சில குழுக்கள் ஈடுபட்டதால் மாநில சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 3-வது முறையாக 1969-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் திகதி முதல் 1972-ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதி வரை 2 ஆண்டுகள், 157 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி நடைமுறையில் இருந்தது.

* அரசியல் குழப்பங்களில் 4-வது முறையாக 1973-ம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி முதல் 1974-ம் ஆண்டு மார்ச் 3-ந் திகதி வரை மொத்தம் 340 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

* ஆட்சி கவிழ்ந்த நிலையில் 1977-ம் ஆண்டு மே 16-ந் திகதி முதல் 1977-ம் ஆண்டு ஜூன் 28-ந் திகதி வரை 5-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமலானது. அப்போது 43 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.

* 1979-ம் ஆண்டு நவம்பர் 14-ந் திகதி முதல் 1980 ஜனவரி 13-ந் தேதி வரை மொத்தம் 60 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.

* அரசியல் குழப்பங்களால் 1981-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் திகதி முதல் 1981 ஜூன் 18-ந் திகதி வரை 110 நாட்கள் 7-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி அமலானது.

* 10 ஆண்டுகளுக்கு பின் 1992-ம் ஆண்டு ஜனவரி 7-ந் திகதி முதல் 1992-ந் திகதி ஏப்ரல் 7-ந் திகதி வரை 91 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.

* 1993-ம் ஆண்டு நாகா- குக்கி இனக்குழுவினரிடையே மிக மோசமான மோதல் நிகழ்ந்தது. இம்மோதல்களில் சுமார் 1,000 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் 1993-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் திகதி முதல் 1994-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் திகதி வரை மொத்தம் 347 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.

* மணிப்பூரில் அரசு பெரும்பான்மை இழந்த நிலையில் 10-வது முறையாக, 2001-ம் ஆண்டு ஜூன் 2-ந் திகதி முதல் 2002-ம் ஆண்டு மார்ச் 6-ந் தேதி வரை மொத்தம் 277 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

* தற்போது 11-வது முறையாக (2025-ம் ஆண்டு) பிப் 12-ம் திகதி முதல் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலேயே ஜனாதிபதி ஆட்சியை அதிக முறை எதிர்கொண்ட மாநிலமாக மணிப்பூர் உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)