மகளை அடித்து துன்புறுத்திய தாய் கைது

 மகளை அடித்து துன்புறுத்திய தாய் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் தனது 13 வயதான மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் குடும்பமொன்று, தந்தை பிரிந்து வேறொரு இடத்தில் வாழ்ந்து வரும் நிலையில், இரு பிள்ளைகளும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளனர்.

அந்நிலையில் தாயார் தனது மூத்த மகளை அடித்து துன்புறுத்துவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசாரணையின் பின்னர் மகளை அடித்து துன்புறுத்த கூடாது என தாய்க்கு பொலிஸார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும், நேற்று முன்தினம் இரவும் அவர் மகளை அடித்துள்ளார். தாய் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் , அதனால் தான் உயிரை மாய்க்க போவதாகவும் மகள் தனது தந்தையின் சகோதரிகளுக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து, பிள்ளையின் தந்தையின் சகோதரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாருடன் சென்று மகளை மீட்டு வந்துள்ளனர்.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நேற்று தாயாரை கைது செய்த பொலிஸார் மகளையும் , தாயையும் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை , மகளை சட்டவைத்திய அதிகாரி முன்பாக முற்படுத்தி வைத்திய அறிக்கையை பெற பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், தாயாரை பிணையில் செல்ல அனுமதித்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)