
7 ஆயிரத்துக்கு அதிகமானோரை அரச சேவையில் இணைத்து கொள்ள அமைச்சரவை அனுமதி
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு, அதுதொடர்பாக கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்ய வேண்டிய அளவு இனங்காணப்பட்டுள்ளது.
அதன்படி, 7,456 பேர் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.
இதற்காகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் பிரதமரின் செயலாளர் தலைமையில் ஒரு அதிகாரி குழுவை நியமிக்கக் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
அந்தந்த அமைச்சுகள், அந்த அமைச்சின் கீழ் உள்ள துறைகள் மற்றும் பிற நிறுவனங்களில் வெற்றிடமாகவுள்ள பதவிகளைக் குழுவிற்குப் பரிந்துரைத்துள்ளன.
அதன்படி, அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காகச் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, குழுவால் முன்மொழியப்பட்ட ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த நோக்கத்திற்காகச் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும், நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்குவதற்காகப் பிரதமர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.