
இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி!
இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகள் மூலம் அவர் புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளின் எதிரொலியாக உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
முன்னதாக மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் கடைசி நேரத்தில் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் கனடாவும், மெக்சிகோவும் கடைசிநேரத்தில் ட்ரம்ப் கோரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்த நிலையில் வரி விதிப்புக்கு ஒரு மாத காலம் தற்காலிக தடை விதித்தார்.
இந்த நிலையில் உலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய இந்த அறிவிப்பை டிரம்;ப் வெளியிட்டுள்ளார்.