
2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஆதிக்கம் : இலங்கை அணிக்கு போராட்டம்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 257 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 330
ஓட்டங்கள் சேர்த்துள்ளது.
இலங்கைக்கு வந்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நேற்று
முன்தினம் தொடங்கியது.
முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் நிஸ்ஸங்க 11 ஓட்டங்களிலும்,தனது கடைசி சர்வதேச போட்டியில் களமிறங்கிய கருணாரத்ன 36 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் சந்திமால் மற்றும் குசல் மெண்டிஸ் பொறுப்புடன் விளையாடி அரைச்சதம் அடித்தனர்.
முதல் நாள் முடிவில் இலங்கை 9 விக்கெட்களை இழந்து 229 ஓட்டங்கள் எடுத்தது. குசல் மெண்டிஸ் 59 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.
நேற்று 2ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய குசல் மெண்டிஸ் 85 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த நிலையில் இலங்கை 257 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
அவுஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், லயன், குனமென் ஆகியோர்
தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
அந்த அணி 80 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 330 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்களை வீழ்த்த இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து போராடி
வருகின்றனர்.