
இரண்டு தனியார் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
கடந்த சில நாட்களாக பள்ளிகள், விமான நிலையங்கள், விமானங்கள், கல்லூரிகள் உள்பட பல்வேறு முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், டெல்லியின் மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனைகளில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால் வெடிகுண்டு மிரட்டல் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த பொலிஸார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பள்ளி நிர்வாகம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் , தீயணைப்புத்துறையினர், வெடிகுண்டு தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இந்த மிரட்டல் புரளியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.