
இந்தியா – இங்கிலாந்து முதல் போட்டி இன்று : பும்ரா அணியில் இல்லை !
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஜஸ்பிரீத் பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி – 20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
இதனால், அவர் 5 வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பெற்றிருந்தார்.
முதல் இரு ஆட்டங்களில் அவர் ஆடமாட்டார்.
உடல்தகுதியை பொறுத்து 3ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று இந்திய அணி தெரிவுக் குழு தலைவர் அஜித் அகார்கர்
தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்ட பின்னர் இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்ட அணிப்பட்டியலில் பும்ரா பெயர் இடம் பெறவில்லை.
இதன் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகியது உறுதியாகியுள்ளது.