படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் மனைவிக்கு முக்கிய பதவி

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் மனைவிக்கு முக்கிய பதவி

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியை  அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் இலங்கைக்கான நிரந்திர வதிவிட அலுவலகத்தின் முதன்மை செயலாளராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்து. 

இதற்கான உத்தியோகபூர்வ நியமனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மறைவுக்கு பின்னர் அமெரிக்காவில் வசித்து வரும் சொனாலி சமரசிங்கவுடன் குறித்த பதவி தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடியுள்ளது.  

இதனை ஏற்றுக்கொண்டுள்ள அவர் நியூயோர்க்கில் அமைந்துள்ள இலங்கையின்  இராஜதந்திர மையத்தில் முதன்மை ஆலோசகராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாக  வெளிவிகார அமைச்சின் முக்கியஸ்தர் மேலும் கூறினார்.

2009  ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி  இனம் தெரியாத நபர்களினால் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட புலனாய்வு ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை குறித்த விசாரணைகள குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டு வருவதுடன், விசாரணைகளுக்கான அழுத்தங்களும்  அதிகரித்துள்ளன. 

மறுபுறம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் ஆட்சி வருவதற்கு முன்னர் லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணைகளை  முன்னெடுப்பதாக உறுதியளித்திருந்தது.

இவ்வாறானதொரு நிலையிலேயே ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவிக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )