
மன்னார் வைத்தியசாலை ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் திடீர் விபத்துக்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் கட்டுமானம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கான இந்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் காணப்படும் ஒரேயொரு மூன்றாம்நிலை சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையான மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் திடீர் விபத்துக்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் கட்டுமானம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்காக உயர்ந்தபட்சம் 600 மில்லியன் இலங்கை ரூபாய்களை நன்கொடையாக வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.
அப்பணிகளுக்கு இருதரப்பினருக்கிடையே கையொப்பமிடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் உடன்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதற்கமைய, இருதரப்பினருக்கிடையிலான குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.