
ஜனாதிபதி மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளது ; மக்கள் அரசியலில் ஏமாற்றமடைந்துள்ளார்கள் – பாட்டலி சம்பிக்க ரணவக்க
ஜனாதிபதி அநுரகுமார மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. மாறாக மக்களை திசை திருப்பி விடும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது. மக்கள் அரசியலில் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என்றே குறிப்பிட வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கண்டி- தலதா மாளிகையில் செவ்வாய்க்கிழமை (04) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சுதந்திரத்தின் பின்னரான 77 ஆண்டுகால வரலாற்றில் பல கலவரங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். இந்த பௌத்த பூமியில் மக்கள் விடுதலை முன்னணியும், விடுதலை புலிகள் அமைப்பும் ஆயுதமேந்தி போராடின. இருப்பினும் இந்த நாட்டினதும், மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.
சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்தியே ஆட்சிக்கு வந்தன. அவர்களே நாட்டின் வளங்களை கொள்ளையடித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள். நாட்டின் இறையாண்மை சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கி, நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தேவைக்கேற்ப நாடு நிர்வகிக்கப்படுகிறது.
தேர்தல் காலத்தில் மாத்திரம் கொள்கைகளை வெளியிடாமல் உண்மையான கொள்கையுடன் செயற்பட வேண்டும். தேர்தல் காலத்தில் முன்வைக்கும் கொள்கைகள் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் பொதுச் சட்டத்துக்கு இயைவானதாக காணப்பட வேண்டும்.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,அவர்களின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.
ஜனாதிபதி அநுரகுமார மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. மாறாக மக்களை திசைத்திருப்பி விடும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது.மக்கள் அரசியலில் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என்றே குறிப்பிட வேண்டும் என்றார்.