
உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர தற்போதைய அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்யுமாறு ஜனாதிபதியிடம் கர்தினால் கோரிக்கை
யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள ஊழல் நிறைந்த அமைப்பை மாற்றி, நாட்டிற்கு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர, தற்போதைய அரசியலமைப்பை உடனடியாக ரத்து செய்து, புதிய அரசியலமைப்பை கொண்டு வருமாறு ஜனாதிபதியிடமும், தற்போதைய அரசாங்கத்திடமும் கேட்டுக்கொள்வதாக ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று (04) காலை பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் நடைபெற்ற தேவ ஆராதனையில் பங்கேற்ற போதே பேராயர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பு எனப்படும் சர்வாதிகார அமைப்புக்கு வழி வகுத்த சட்ட கட்டமைப்பிற்குள் தலைவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதீத அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிட்ட கர்தினால், இதன் விளைவாக இனங்களுக்கு இடையே எளிதில் தீர்க்கப்படக்கூடிய கருத்து வேறுபாட்டை போராக மாற்றி,, நாட்டில் ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர்கள் 1990 களில் இருந்து ஊடக ஒடுக்குமுறை, ஊடகவியலாளர்களை காணாமல் ஆக்குதல், வெள்ளை வேன் கலாச்சாரம் மற்றும் எதிரிகளை சிறையில் அடைத்தல் போன்ற பயங்கர செயல்களைச் செய்ததாகவும் பேராயர் கூறினார்.
பேரழிவு தரும் போரினால் தாயகம் ஆழமான பொருளாதார வீழ்ச்சியில் மூழ்கியதாக சுட்டிக்காட்டிய பேராயர், கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தப் போக்கு தீவிரமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்.