இவ்வாறே போனால் இன்னும் 2 வருடங்களில் மீண்டுமொரு கடன் மறுசீரமைப்பொன்றை செய்ய வேண்டி வரும்
IMF உடன்படிக்கை மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது, சர்வதேச நாணய நிதியத்தோடு புதியதொரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என்று ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது கூறியது.
இப்போது முந்தைய அரசாங்கம் இணக்கப்பாடு கண்ட அதே ஒப்பந்தத்தை அதே வழியில் முன்னெடுத்து வருகின்றது. இவற்றுக்கு மத்தியில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதா என அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறேன்.
மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாடு எதிர்கொள்ளும் உண்மையான யதார்த்தம் என்னவென்றால், நாட்டிற்கு வழங்கியுள்ள பல முக்கிய இலக்குகளை நாம் முடிக்க வேண்டும். அவற்றில், விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் உயர் அரசாங்க வருவாயைப் பேணுதல் முக்கியமானதாகும்.
தவறும் பட்சத்தில், இன்னும் 2-3 வருடங்களில் மற்றொரு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு செல்ல வேண்டி ஏற்படும். நான் இந்த விடயத்தை உறுதியாகச் சொல்கின்றேன். கடந்த காலங்களிலும் இதுபோன்ற எதிர்வுகூறல்களைச் சொன்னபோது நான் பரிகசிக்கப்பட்டேன், ஆனால் பின்னர் அவை அனைத்தும் நிகழ்ந்தன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
குருநாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் இன்று (03) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளால் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்ட IMF ஒப்பந்தங்களை ஆராயும் போது, கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்களில் 59% மீண்டுமொரு கடன் மறுசீரமைக்கு இட்டுச் சென்றுள்ளன. இந்த உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கின்றனர்.
இவற்றை யாரும் மக்களுக்குச் சொல்வதில்லை. மற்றொரு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு செல்வது என்பது மக்களை மேலும் சிக்கலில் தள்ளும் விடயமாகும். இது சவாலானது.
முன்னோக்கிய பயணம் பல பிரச்சனைகளை கடந்து செல்ல உள்ளது. எனவே ஒரு நாடாக நாம் அந்த சவால்களை எதிர்கொண்டு நாட்டை பாதுகாக்க வேண்டும்.
எனவே நமது நாடு குறித்த விடயங்களில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த அஞ்ச வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த தருணத்திலும் கூட எமது நாட்டு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் பதிலை எதிர்பார்த்து க்கொண்டிருக்கின்றனர். நாட்டின் குடி மக்கள், நல்ல வலுவான கொள்கைகள் மூலம் மக்களுக்கும் நாட்டுக்கும் நல்ல.
நிலையை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தவே அரசாங்கமொன்றை ஆட்சில் அமர்த்துகின்றனர். பிரச்சினைகளுக்கான பதில்களை வழங்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வழங்கிய வாக்குறுதிகளில் எத்தனை வீதத்தை இந்த குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளீர்கள் ? என்ன நடந்தது ? என்பது தொடர்பில் சாதாரண மக்களின் வாழ்வில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில் இருந்து கொண்டு நாம் கேள்வி எழுப்பிப் பாரக்க வேண்டும்.
எனவே சமாளிப்பான பேச்சுகளை விடுத்து யதார்த்தமான ஆட்சியை முன்னெடுப்பதில் இந்த அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று அரிசி தட்டுப்பாடு, தேங்காய் தட்டுப்பாடு, உப்பு தட்டுப்பாடு, பொருட்களின் விலை உயர்வு மறுபுறம் வருமான வீழ்ச்சி என பன்முக நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் தற்போதைய அரசாங்கம் மக்களை வாழவைப்பதற்காக வேண்டி எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினைகளுக்கான பதில்கள் நாட்டு மக்களை திருப்தியடையச் செய்துள்ளதா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.