எதிர்கால அரசியல் தலைவர்களாக நாட்டை கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதியை பாடசாலை பருவத்திலேயே எடுக்க வேண்டும்
எதிர்கால அரசியல் தலைவர்களாக, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதியை பாடசாலைப் பருவத்திலேயே எடுக்க வேண்டும் – கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் தெரிவிப்பு
சிறந்த கல்வியைப் பெறுவதன் மூலம் எதிர்கால அரசியல் தலைவர்களாக உருவாகி, நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் ஒரு பகுதியாக மாறுவதற்கான உறுதிப்படை பாடசாலைப் பருவத்திலேயே எடுக்க வேண்டும் என கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களிடையே உரையாற்றிய கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் 2025.01.28 ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்பக் நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்புபடுவதற்கு இளைஞர்களிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறந்த அரசியல் கலாசாரத்தின் மூலம் எதிர்கால அரசியல் தலைமைத்துவத்துக்கு வருவதற்கு மாணவர்களுக்கு முன்மொழிவதாக அவர் சுட்டிக்காட்டினார். ஜனநாயக முறையில் பிரஜைகளின் பங்கேற்பை அதிகரிக்கும் முக்கியத்துவத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார். அத்துடன், அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டம் மூலம் கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் மிகவும் முறைமையான நாடொன்றைக் கட்டியெழுப்ப உத்தேசிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இதன்போது மாணவர்களுக்கு பிரதமரிடம் கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி குறிப்பிடுகையில், சிறுபராயம் முதல் ஒழுக்கமுள்ள பிரஜையாகுவதற்கு சிறுவர்கள் உறுதிகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். அத்துடன், உயர்ந்த மனிதப் பண்புகள் மற்றும் விழுமியங்களுக்கான பயிற்சியை பாடசாலைக் காலத்திலே பெறுவது சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதற்கு அத்தியாவசியமானது எனவும் பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர குறிப்பிடுகையில், உலகின் முதல் பெண் பரதமராக பதவியேற்று, சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களுக்கு இலங்கையின் பெயரை உயர்த்த முடிந்ததாகத் தெரிவித்தார். அத்துடன், தற்போதைய பிரதமரும் ஒரு பெண் என்பதால், பாலின வேறுபாடின்றி எதிர்காலத் தலைவர்களாக மாறும் ஆற்றலை இந்த மாணவிகள் கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற வரலாற்றில் அதிகூடிய பெண் பிரதிநிதித்துவம் இந்தப் பாராளுமன்றத்தில் காணப்படுவது எதிர்கால பெண் தலைவர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்றும் செயலாளர் தெரிவித்தார். மேலும், தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்துவதற்கு மாணவர் பாராளுமன்றம் ஒரு முக்கியமான தளம் எனக் குறிப்பிட்ட அவர் பாராளுமன்ற முறைமை தொடர்பில் அடிப்படை விளக்கத்தை வழங்கினார்.
அத்துடன், இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க, ‘Clean Sri Lanka’ திட்டம் குறித்து அடிப்படை விளக்கத்தை வழங்கியதுடன், ஒரு சிறந்த நாட்டை உருவாக்குவதில் சிறுவர்களின் பொறுப்பு குறித்து விரிவாக விளக்கினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா, ஆளுமை மற்றும் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்திக் கொண்டு எதிர்காலத் தலைவர்களாகுவதற்கு மாணவர் பாராளுமன்றம் போன்ற திட்டங்கள் மிகவும் முக்கியமானவை எனக் குறிப்பிட்டார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் அதிபர் கலாநிதி சுமேதா ஜயவீர, இந்நாட்டின் பாராளுமன்றமாக பல தசாப்தங்கள் காணப்பட்ட வரலாற்று ரீதியான இந்த இடத்திலிருந்து மாணவர்கள் இந்த அனுபவத்தைப் பெறுவது மிகவும் பெறுமதி மிக்கது என்று குறிப்பிட்டார்.
அதனையடுத்து, கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்கா கல்லூரி மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் “ஒரு சிறந்த இலங்கையை உருவாக்குவதில் பிரஜைகளின் பொறுப்பு” என்ற தலைப்பில் ஒரு விவாதத்தையும் நடத்தினர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கௌரவ பிரதமர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவை பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாணவர் பாராளுமன்ற திட்டத்தின் ஒரு அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவை பிரிவு முகாமையாளர் புத்தினீ ராமநாயக்க உள்ளிட்ட பல அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.