உள்ளூராட்சித் தேர்தல் திகதி விரைவில்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இரத்துச் செய்துவிட்டு புதிய வேட்பு மனுக்களை கோருவதற்கான திருத்தச் சட்டமூலம் மீதான மனுக்கள் உயர்நீதிமன்றத்தின் இரகசிய தீர்ப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடனேயே, தேர்தலுக்கான திகதியை உடனடியாக அறிவிக்க தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சட்டதிட்டங்களின் பிரகாரம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியுமென்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகள் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள நிலையில், இந்த மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து சட்டமூலத்தில் திருத்தங்களுடன் சட்டம் நிறைவேற்றப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து தேர்தலுக்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கப்படுகிறது.