வயநாடு நிலச்சரிவில் காணாமல் போன 32 பேர் உயிரிழந்து விட்டனர்
வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதோடு ஊருக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்தது.
நிலச்சரிவில் சிக்கி 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மீட்கப்பட்டனர். இந்த நிலச்சரிவால் மேற்கண்ட பகுதிகள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு வீடுகள் மண்ணில் புதைந்தும், உருக்குலைந்தும் போனது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி சில நாட்கள் நடந்த பின்னர் கைவிடப்பட்டது. சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பின்னர் காணாமல் போன 32 பேர் இதுவரை கண்டறியப் படவில்லை. ஸ
இந் நிலையில் அவர்களை வயநாடு மாவட்ட பேரிடர் ஆணையம் உயிரிழந்து விட்டதாக அங்கீகரித்து உள்ளது.
இதுகுறித்து மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
மாவட்ட பேரிடர் ஆணையம் அளித்துள்ள இந்த பட்டியலை உள்துறை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோர் சரிபார்த்து, மாநில பேரிடர் ஆணைய முதன்மை செயலாளருக்கு அனுப்புவார்கள். இவர்கள் அங்கீகரித்த அறிக்கையின் அடிப்படையில், மாநில குழு அதை சரிபார்த்து நிலச்சரிவில் காணாமல் போனவர்களை இறந்து போனவர்களாக அறிவிக்க பரிந்துரை செய்யப்படும்.
அதன் பின்னர் கேரள அரசு 32 பேரை இறந்தவர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். இந்த உத்தரவின் அடிப்படையில், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் உள்ளிட்ட அனைத்து பயன்களும் வழங்கப்படும்.
மேலும் அவர்கள் மரணம் பதிவு செய்யப்பட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். பின்னர் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.