நிதி மோசடியில் ஈடுபட்டவர் கட்டுநாயக்கவில் விமான நிலையத்தில் வைத்து கைது
பேஸ்புக் கணக்கொன்றினுள் பிரவேசித்து உறவினரைப் போல ஆள்மாறாட்டம் செய்து நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று (21) இலங்கை வந்தபோது, கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் உறவினர் போல் தன்னை காட்டிக் கொண்டு மோசடியாக பேஸ்புக் கணக்கின் ஊடாக, மூன்று சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்கு ஒன்றிலிருந்து 700,000 ரூபாயை வைப்பிலிடச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதியன்று கொழும்பு குற்றப்பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது. அதன் பின்னர் சம்பந்தப்பட்ட கணக்குகளை தணிக்கை செய்தபோது சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, அவர் கட்டாரில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபருக்கு எதிராக குடிவரவுத் தடை பெறப்பட்டதுடன், நேற்று அவர் நாட்டிற்கு வந்தவுடன், கொழும்பு குற்றப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொன்னேகுளம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.