விவசாயிகளுக்கான ரூ. 25000 உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை
விவசாயிகளுக்கான ரூ. 25000 உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை. கடந்த பாராளுமன்ற அமர்விலும் இது குறித்து கேள்வி எழுப்பினேன். இன்னும் இதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 40% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 25000 ரூபா முழுமையான மானியம் முறையாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல், கல்கமுவ தேர்தல் தொகுதி அமைப்பாளர் பந்துல பண்டாரநாயக்க அவர்கள் அண்மையில் (ஜனவரி 18) கல்கமுவ வாராந்த சந்தைத் தொகுதி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
விதைக்கும் காலம் என்பதால் உர மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும். அன்று அழகான வார்த்தைகளைப் பயன்படுத்தி சொன்ன விடயங்கள் இன்று சாத்தியமில்லாது போயுள்ளன. பேச்சுக்கும் செயலுக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
தேர்தலுக்கு முன்னர் 33% மின் கட்டணம் குறைக்கப்படும் என கூறப்பட்ட போதும், அதனை 37% அதிகரிக்க முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார். 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபை கூறியபோது, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மக்கள் ஆலோசனைகளை பெற்று, மின் கட்டணத்தை 20% குறைத்திருக்கிறது.
தேர்தலின் போது ஒரு கதையைச் சொல்லி, இப்போது இன்னுமொரு கதையைச் சொல்லி மக்களின் பலமான கோரிக்கையைக்கூட புறக்கணிக்கும் நிலையை அரசு எட்டியுள்ளது. மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் தெளிவான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. மக்களின் நலனுக்காக எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.