தொடரும் கலாநிதி பட்டம் குறித்த சி.ஐ.டியின் விசாரணை
பாராளுமன்ற இணையதளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் ஜயலத் பெரேராவுக்கு வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, அவர் அங்கு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஜயலத் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராவது இது இரண்டாவது முறை என்று தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற இணையதளத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்குப் பொறுப்பான அவைச் செயலகம், சட்டவாக்க சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கீழ் உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஜயலத் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், முன்னதாக, சுமார் 8 பாராளுமன்ற அதிகாரிகள் அந்தத் திணைக்களத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
பாராளுமன்ற இணையதளத்தில் தனது பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டதால் தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, நீதி அமைச்சர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.