4 வயது சிறுவன் சடலமாக மீட்பு
குடும்ப தகராறு காரணமாக தனது 4 வயது மகனுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண் ஒருவர், உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு லிந்துல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், தலவாக்கலையில் அதிகாரிகள் பொதுமக்கள் இணைந்து நான்கு வயது சிறுவனை தேடுவதற்கான நடவடிக்கைகளை இன்று (17) முன்னெடுத்திருந்தனர். இந் நிலையில் குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை தேவ்சிரிபுர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த ஒரு ஆணுடன் வசித்து வந்துள்ளார். தனது கணவர் மறுமணம் செய்து கொண்டதால் வருத்தமடைந்த அந்தப் பெண், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நேற்று (16) வந்து தலவாக்கலை ரயில் பாலத்திலிருந்து நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு பெண் குழந்தையுடன் குதிப்பதைக் கண்ட உள்ளூர்வாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். நீர்த்தேக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்த அந்த பெண், முதலில் மீட்கப்பட்டு லிந்துல பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிசிச்சைகளுக்காக பின்னர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
16 ஆம் திகதி மதியம் காணாமல் போன 4 வயது தினேஷ் ஹம்சின் என்ற குழந்தையைத் தேடும் பணியைத் மேல் கொத்மலை நீர்த்தேக்க பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், தலவாக்கலை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஆகியோர் தொடங்கினர்.
இருப்பினும், உடலைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே தேடுதல் பணி தீவிரமடைந்தது. 17 ஆம் திகதி காலை நடவடிக்கை தொடங்கப்பட்டது.
நீர்த்தேக்கத்தில் குதித்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையிலான குடும்ப தகராறு தொடர்பாக தலவாக்கலை மற்றும் பூண்டுலோயா பொலிஸாரினால் பல முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.