மலையக பிள்ளைகளின் கல்வி மற்றும் தொழில் பயிற்சி வசதிகள் தொடர்பில் பிரதமர் அவதானம்
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் வாழும் கவனிப்பாரற்ற மக்கள் பிரிவான மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி, வீடு, கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
முன்வைக்கப்பட்ட தென் மற்றும் மேல் மாகாணங்களில் வாழும் மலையக மக்களின் அடிப்படை கோரிக்கைகள் அடங்கிய பிரகடனம் தொடர்பில் பிரதமர் இதன்போது விசேட அவதானம் செலுத்தியதுடன், பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி மற்றும் தொழில் பயிற்சி வசதிகள் தொடர்பில் நேரடியாக தொடர்புகொண்டு செயற்படுவதாகவும், அடிப்படை வசதிகள் மற்றும் காணி, வீடு பிரச்சினைகள் தொடர்பில் உரிய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து குறித்த கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அந்தோனி ஜேசுதாசன், நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் ரவீனா ஹசந்தி, தேசிய நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் ராஜன் உள்ளிட்ட அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.